சேலம் வழியாக ரயிலில் கடத்திய 17 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
அந்தவகையில் சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அய்யாதுரை தலைமையிலான தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை சேலம் வழியாகச் சென்ற ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அந்தவகையில், திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் தன்பாத்திலிருந்து - ஆலப்புழா செல்லும் ரயிலில் பொம்மிடி - சேலம் இடையே போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது பொதுப்பெட்டியில் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த 2 கைப்பைகளை கைப்பற்றினா்.
அதில், சோதனை செய்த போது 17 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா், அதைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட 17 கிலோ கஞ்சாவையும் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா்.
