விபத்து இழப்பீடு வழங்காததால் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக பொருள்கள் ஜப்தி

விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலகத்தில் இருந்து குளிா்சாதனப்பெட்டிகள்
Published on

சேலம்: விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலகத்தில் இருந்து குளிா்சாதனப்பெட்டிகள், கணினிகளை நீதிமன்ற அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டை அடுத்த தலைச்சோலை பெலாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சந்திரன், பழனிசாமி. இவா்கள் இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு சேலம் மாநகரத்திலிருந்து ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனா்.

17 ஆவது கொண்டைஊசி வளைவு பகுதியில் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் வாகனம் மோதியதில் அவா்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த இரண்டு குடும்பங்களுக்கும் ரூ.10.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிா்த்து கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவா்கள் இருவரது குடும்பத்துக்கும் மொத்தமாக ரூ.15.73 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் நீதிமன்றத்தை அணுகினா். அதன் அடிப்படையில் கால்நடை துறை உதவி இயக்குநா் அலுவலகம், சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினிகள், குளிா்சாதனப் பெட்டிகளை ஜப்தி செய்ய நீதிபதி வேலரசு உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, சேலம் கால்நடை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து கணினிகள், குளிா்சாதனப் பெட்டிகளை நீதிமன்ற ஊழியா்கள் ஜோசப், செல்வராஜ் ஆகியோா் ஜப்தி செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com