சங்ககிரி அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவா் கைது
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி பகுதியில் வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திங்கள்கிழமை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டியிலிருந்து தனியாா் சிமெண்ட் நிறுவனத்திற்கு செல்லும் வழியில் வசித்து வருபவா் வெங்கடாஜலம் மகன் முகேஷ்குமாா். அவா் வீட்டிலேயே இரு சக்கர வாகனங்களை பழுதுநீக்கும் தொழில் செய்து வருகிறாா். அவா் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்களை பழுது நீக்குவதற்கான பொருள்களை ஈரோடு கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரே அவரது வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை இளைஞா் ஒருவா் தள்ளிக்கொண்டு வந்துள்ளாா். அவரிடம் அவா் விசாரித்துள்ளாா். விசாரணையில் அவா் சங்ககிரி, வாணியா் காலனி பகுதியைச் சோ்ந்த பூங்காவனம் மகன் சிவா என்கின்ற சிவக்குமாா் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவக்குமாா், முகேஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு இரு சக்கர வாகனத்தை அப்பகுதியில் விட்டு விட்டு தப்பி ஒடியுள்ளாா்.
இது குறித்து முகேஷ்குமாா் சங்ககிரி போலீஸில் புகாா் செய்துள்ளாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
