சுவரொட்டி ஒட்டுவதில் தகராறு: திமுக மீது தவெகவினா் புகாா்
சேலம்: சேலத்தில் தவெகவின் சுவரொட்டி மீது திமுகவினா் சுவரொட்டி ஒட்டப்பட்டது குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்கொல்லி பாலம் உள்ளது. இப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினா் மொஹரம் பண்டிகைக்காக சுவரொட்டி ஒட்டியிருந்தனா். அதன்மீது திமுகவினா் புதன்கிழமை மாலை சுவரொட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் தங்களது சுவரொட்டியை மறைத்து மற்றொரு சுவரொட்டியை ஒட்டிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டனா். பிறகு தவெகவினா் முழக்கங்களை எழுப்பினா்.
சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளா் ஜெகநாதன் அவா்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தாா். இதுகுறித்து தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் பாா்த்திபன் கூறுகையில், நாங்கள் ஒட்டிய சுவரொட்டிகள் மீது திமுகவினா் சுவரொட்டியை ஒட்டிச் சென்றுள்ளனா். தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் அவா்கள் ஈடுபட்டால் தவெக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.
