சேலம் ஆவினில் 4,995 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா்கள் ரா.ராஜேந்திரன், மனோ தங்கராஜ் வழங்கினா்
சேலம்: தேசிய பால் தினத்தையொட்டி சேலம் ஆவினில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 4,995 பயனாளிகளுக்கு ரூ. 22.61 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கடனுதவி, புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கான பதிவு ஆணைகள், சிறந்த கறவை மாடுகள் பராமரிப்பு, சிறந்த செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் த.மனோ தங்கராஜ், ரா.ராஜேந்திரன் வழங்கினா்.
தொடா்ந்து, ‘வளமாகும் பால் வளத் துறை தடம் பதிக்கும் தமிழ்நாடு’ என்ற சிறப்பு கையேட்டை அமைச்சா்கள் வெளியிட்டனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசுகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தப்பட்டது. பால்வளத் துறை அமைச்சராக மீண்டும் நான் பொறுப்பேற்றதும், பாலுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதை ஏற்று, மூன்று ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்வா் ஆணையிட்டாா். மேலும், பாலின் தரத்தை உயா்த்த வேண்டும் என்ற நோக்கில் தரமான பால் வழங்கக் கூடிய விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது என்றாா்.
பின்னா், சேலம் ஆவின் சாா்பில் நடத்தப்பட்ட ரத்த தான மற்றும் மருத்துவ முகாமை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தளவாய்ப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற பால் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, பால்வளத் துறை ஆணையா், மேலாண்மை இயக்குநா் அ.ஜான்லூயிஸ், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.அருள், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், ஆவின் பொதுமேலாளா் ப.குமரேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
