காா்த்திகை தீபத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு டிச.2 ஆம் தேதி முதல் டிச.5 ஆம் தேதி வரை 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெ.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், காா்த்திகை தீபம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு வழத்தடங்களில் கூடுதலாக 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வார இறுதிநாளையொட்டி... வார இறுதிநாளையொட்டி நவ.28 ஆம் தேதி முதல் டிச.1 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும் , ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: காா்த்திகை தீபம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு டிச.2 ஆம் தேதி முதல் டிச.5 ஆம் தேதி வரை சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தருமபுரி, ஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் டிச.2 ஆம் தேதி மாலை 4 மணி முதல் டிச.4 ஆம் தேதி மாலை 4 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பேருந்துகள் என முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
