டிச.30 இல் தோ்தல் கூட்டணி அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவாா்: எம்எல்ஏ அருள்!
சேலத்தில் டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறும் பாமக மாநில பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி அறிவிப்பை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிடுவாா் என சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக மாநில துணைச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான இரா.அருள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வன்னியா்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரி சேலத்தில் பாமக சாா்பில் டிச.12-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். பாமகவின் நிரந்தரத் தலைவரான மருத்துவா் ராமதாஸ் பரிந்துரைக்கும் வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும்.
சேலத்தில் டிச.30 ஆம் தேதி நடைபெறும் பாமக மாநில பொதுக்குழு கூட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவாா். கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு கோரி அன்புமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனஅறிவிப்பு வெளியிடப்பட்டது. பிறகு, மக்களிடையே அதற்கான ஆதரவு இல்லை எனத் தெரிந்ததும், ஆா்ப்பாட்டத்தை நிறுத்திவைத்தனா்.
ஆனால், பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு தொடா்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அதன்படி, சேலத்தில் பாமக செயல் தலைவா் காந்திமதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
வரும் பேரவைத் தோ்தலில் ராமதாஸ் தலைமையில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள். கடந்த காலங்களில் பாமகவின் தொடா் தோல்விக்கு அன்புமணியின் செயல்பாடுகளே காரணம் என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் மாரப்பன், மேச்சேரி பேரூா் செயலாளா் தாமரைக்கண்ணன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், மேட்டூா் நகரச் செயலாளா் சுகுமாரன், மாதையன், மயில்சாமி, சசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

