டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: காவல் ஆய்வாளரிடம் பொதுமக்கள் மனு
ஆட்டையாம்பட்டியை அடுத்த மேட்டுக்கடையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என காவல் நிலைய ஆய்வாளரிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஆட்டையாம்பட்டியை அடுத்த பாப்பாரப்பட்டியில் இயங்கிவந்த டாஸ்மாக் மதுக் கடை பொதுமக்களின் போராட்டத்துக்குப் பிறகு மேட்டுக்கடை பகுதிக்கு மாற்றப்பட்டது. அப்பகுதியில் பள்ளி, கோயில்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு அதிக இடையூறுகள் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மதுக் கடையை மீண்டும் அதே பகுதியில் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் ஆட்சியா், உயரதிகாரிகளுக்கு மனு அளித்தனா். மேலும், வியாழக்கிழமை ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் கண்ணனிடம் 50-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பட விளக்கம்:
டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிடக் கோரி காவல் நிலையத்தில் மனு அளித்த பொதுமக்கள்.

