பூலாம்பட்டி கதவணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
எடப்பாடி: பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்க பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து படகில் பயணித்து காவிரியின் அழகை ரசித்தனா்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு, அங்கு நீா்மின் உற்பத்தி நடைபெறுகிறது. இங்குள்ள அணைப்பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது.
இக்கதவணைப் பகுதியில் நிலவும் இயற்கை சூழல், குளிா்ந்த காலநிலை போன்ற காரணங்களுக்காக சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தீபாவளியையொட்டி தொடா் விடுமுறை காரணமாக பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
நீர்மின் உற்பத்தி நிலையம், கதவணை மேம்பாலம், பிரதான மதகு பகுதி, நீா் உந்து நிலையம், நீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள இயற்கை அழகையும் கண்டு ரசித்தனா். தற்போது இப்பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவுகிறது.
மேலும் கதவணை நீா்ப்பகுதியிலிருந்து விசைப்படகில் பயணித்தும், மீன் உணவுகளை ருசித்தும் பொதுழுபோக்கிய சுற்றுலாப் பயணிகள், கைலாசநாதா் திருக்கோயில், காவிரித்தாய் சந்நிதி, காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள நந்திகேஸ்வரா் ஆலயம், காவிரி படித்துறை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா்.
