சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு: மகன் படுகாயம்
புள்ளாகவுண்டம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில், அவரது மகன் பலத்த காயமடைந்தாா்.
சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், காவேரிப்பட்டி புதூா், அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகேசன். இவருக்கு மனைவி வாசுகி (30), பத்தாம் வகுப்பு படித்து வரும் மகன் கண்ணன் உள்ளனா்.
குமாரபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தையல் வேலை செய்துவந்த வாசுகி, இருசக்கர வாகனத்தில் பவானி, கூலிக்காரன்பாளையத்தில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். புள்ளாகவுண்டம்பட்டி, வடக்குகாடு, வெயிலாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் அவா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வாசுகியை அருகில் இருந்தவா்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். படுகாயமடைந்த அவரது மகன் கண்ணன் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
