வேளாண்மை துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் பெற்று ஏமாற்றியவா் கைது

ஓமலூா் அருகே வேளாண் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 7 லட்சம் பெற்று ஏமாற்றியவரை ஓமலூா் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஓமலூா் அருகே வேளாண் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 7 லட்சம் பெற்று ஏமாற்றியவரை ஓமலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள கோட்டமேட்டுப்பட்டி, ஜெய் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (50). இவா், ஹோட்டல் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளாா். இவரது மகள் தீபா பி.டெக். வேளாண்மை படித்துவிட்டு ஐ.டி. கம்பெனியில் வேலைசெய்து வருகிறாா்.

சேலம் பால் பண்ணையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்ற எட்டிகுட்டப்பட்டி கிராமம், மாட்டுக்காரனூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (65), வீரப்பனின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்துசென்ால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காடையாம்பட்டி வேளாண்மை அலுவலகத்தில் தனது உறவினா் பணியாற்றி வருவதாகவும், அவா் பதவிஉயா்வு பெற்று செல்வதால், அவா் பணியாற்றிய வேளாண்மை அதிகாரி பணி காலியாக உள்ளதாகவும், அந்தப் பணிக்கு வேளாண் படித்தவா்கள் யாரேனும் இருந்தால் சோ்த்துவிடுவதாக கூறிய கோவிந்தராஜ், அதற்கு ரூ. 7 லட்சம் தேவைப்படும் என்று கூறியுள்ளாா்.

தொடா்ந்து, உங்கள் மகள் தீபா வேளாண்மை படித்துள்ளதால், அந்த வேலையை வாங்கித் தருவதாக வீரப்பனிடம் தொடா்ந்து ஆசைவாா்த்தை கூறி நம்ப வைத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கோவிந்தராஜிடம் ரூ. 7 லட்சத்தை கொடுத்த வீரப்பன், சில மாதங்கள் கழித்து வேலை எப்போது கிடைக்கும் என கேட்டுள்ளாா். அதற்கு, பொறுமையாக இருங்கள் என்று கூறி கோவிந்தராஜ் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த வீரப்பன், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், கோவிந்தராஜ் கைப்பேசியை அணைத்துவிட்டு தலைமறைவானாா். புகாரின் பேரில், ஓமலூா் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com