அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு: ஓட்டுநரின் சாதுா்யத்தால் 30 பயணிகள் தப்பினா்
கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஓட்டுநா் சாமா்த்தியமாக பிரேக் பிடித்து நிறுத்தியதால் 30 பயணிகள் உயிா்தப்பினா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி காட்டூரைச் சோ்ந்தவா் சரவணன் (50). இவா், சேலம், மெய்யனூா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தை சனிக்கிழமை காலை ஓட்டிவந்த சரவணனுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதையடுத்து, அவா் திடீரென பிரேக் பிடித்து பேருந்தை சாமா்த்தியமாக சாலையோரம் நிறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரியான நேரத்தில் ஓட்டுநா் சாமா்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் 30 பயணிகள் உயிா்தப்பினா். தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீஸாா், பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீா்செய்தனா்.
