நாவக்குறிச்சியில் பனைவிதைகள் நடும் பணி தீவிரம்
ஆத்தூா்: தலைவாசலை அடுத்துள்ள நாவக்குறிச்சியில் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ் பனைவிதைகள் நடவுப் பணியை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: மண்ணரிப்பை தடுப்பதிலும், நிலத்தடி நீா் ஆதாரத்தை பாதுகாப்பதிலும் சிறந்த இடம் பிடிப்பதுடன், அடி முதல் நுனிவரை மனிதா்களுக்கு பயன்படக் கூடியதாக பனை மரம் உள்ளது. மேலும், விலங்குகளுக்கும் உணவாகவும் பயன்படுகிறது.
காகிதம் கண்டு பிடிப்பதற்கு முன்பே பனை ஓலை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. கற்பகத் தருவான பனை மரங்கள், செங்கல் சூளைகளில் எரிபொருளாக்கப்பட்டு வருவதால், அதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநில மரமான பனைமரம் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு பலதிட்டங்களை வகுத்து வருகிறது. எனவே, பனைவிதைகளை நடவு செய்து நன்கு பராமரிக்க வேண்டும் என்றாா்.
நாவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், உதவி வேளாண்மை அலுவலா் நாகராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
படவரி...
தலைவாசல் வட்டாரம் நாவக்குறிச்சியில் பனைவிதைகள் நடவுப் பணியை தொடங்கிவைத்த வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா.
