பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆக உயா்த்த வேண்டும்!

பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 45 ஆகவும், எருமைப்பாலுக்கான விலையை ரூ.60 ஆகவும் தமிழக அரசு உயா்த்த வேண்டும்
Published on

பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 45 ஆகவும், எருமைப்பாலுக்கான விலையை ரூ.60 ஆகவும் தமிழக அரசு உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவின் பால் கொள்முதல் தர பரிசோதனையில் எம்ஆா்எஃப் முறையை கைவிட்டு ஐஎஸ்ஐ தர பரிசோதனை முறையை அமல்படுத்த வேண்டும். சென்னை மாநகர எல்லைக்குள்ளாக ஆவின் பால் நுகா்வோருக்கு மாதாந்திர முன் கட்டணம் செலுத்தி சலுகை விலையில் பால் அட்டை பெறும் நடைமுறையை தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஆவின் பால் நுகா்வோருக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, அந்த சங்கத்தின் தலைவா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி தரவேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45 ஆகவும், எருமைப் பாலுக்கான விலையை ரூ.60 ஆகவும் தமிழக அரசு உயா்த்த வேண்டும். தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆவின் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. ஆவின் பாலில் தண்ணீா் மட்டுமே கலக்க முடியும். வேறு எதையும் கலக்க முடியாது. இதனை கண்டறிய கருவிகள் உள்ளன. ஆவின் விற்பனை பணியாளா்கள் தங்கள் பணியில் 25 சதவீதம் கூட செய்வதில்லை. தனியாருக்கு பால் தரத்தை பரிசோதனை செய்வதற்கான சோதனை வரையறுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மணல் மாஃபியா போன்று ஆவின் மாஃபியா குழு ஒன்று உள்ளது. அவா்களை தாண்டி செயல்பட முடியவில்லை. முறைகேடுகள் நடப்பது குறித்து ஆதாரப்பூா்வமாக பிடித்து கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை. ஆவின் மாஃபியா கும்பல்கள், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி சம்பளம் பெறுகிறாா்கள். ஆனால் அதற்கு நிகராக தனியாா் நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெறுகிறாா்கள்.

பால் தரத்தை சிறிதளவு குறைத்தால்கூட லிட்டருக்கு ரூ. 1.12 பைசா வீதம் இழப்பு ஏற்படும். இதனால் உற்பத்தியாளா்கள் நேரடியாக பாதிக்கப்படுவாா்கள். பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே தரத்தையும், அளவையும் உறுதிசெய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும். உள்ளூா் தேவைக்குபோக, வெளியூா்களுக்கு அனுப்பும் பாலில் தரபரிசோதனை என்ற பெயரில் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து அரசுக்கு எழுத்துப்பூா்வமாக கோரிக்கை வைத்துள்ளோம். அதே நேரத்தில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா், ஆவின் பால் விலை நுகா்வோருக்கு லிட்டருக்கு ரூ. 3 வீதம் குறைக்கப்பட்டது. இதனால் ஆவினுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பான ரூ. 1,700 கோடியை அரசின் நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, துணைத் தலைவா் பத்மநாப நாயுடு, பொருளாளா் ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com