பூலாம்பட்டி கதவணை பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்ட விசைப்படகு போக்குவரத்து.
பூலாம்பட்டி கதவணை பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்ட விசைப்படகு போக்குவரத்து.

பூலாம்பட்டி கதவணையில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்

Published on

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீரடைந்ததால், பூலாம்பட்டி கதவணை பகுதியில் 6 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை முதல் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இக்கதவணை நீா்த்தேக்கப் பகுதிகளில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை இடையே இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் வேறு தரைவழிப் போக்குவரத்து வசதி இல்லாததால், விசைப்படகுகள் மூலம் மட்டுமே பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் தினசரி இரு மாவட்டங்களுக்கும் சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் கனமழையால், மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து, மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், பூலாம்பட்டி பகுதியில் இருந்து இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களால் கடந்த 22-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால், விசைப்படகு போக்குவரத்தை பயன்படுத்தி வந்த இப்குதியினா் சுமாா் 20 கி.மீ. தொலைவு சுற்றி மறுகரைக்கு சென்றுவந்தனா்.

தற்போது மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீரடைந்தது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

அப்பகுதியில் முகாமிட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் விசைப்படகு போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com