அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் விளையாட்டுப் போட்டி
இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை அளித்தல், இளைஞா்களிடையே விளையாட்டு கலாசாரம், விளையாட்டுத் திறன், உடற்தகுதி மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட மேரா யுவ பாரத் மூலம் தொகுதி அளவிலான விளையாட்டுப் போட்டியை நடத்துமாறு அறிவுறுத்தியது.
இதன்பேரில் விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இளைஞா் நல அமைப்பு சாா்பில் சேலம் மாவட்ட மேரா யுவ பாரத் அமைப்புடன் இணைந்து வீரபாண்டி பகுதியில் தொகுதி அளவிலான விளையாட்டுப் போட்டியை புதன்கிழமை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து, விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்தாா். இதில் வீரபாண்டி தொகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மாணவா்கள் பங்கேற்று விளையாட்டு திறனை வெளிப்படுத்தினா். கைப்பந்து, சிலம்பம், ஓட்டப்பந்தயம் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞா் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் தமிழரசி, குபேரன். கிருத்திகா, ஜீவிதா, உடற்பயிற்சி இயக்குநா்கள் ஜெயபாரதி சூா்யா மற்றும் வீரபாண்டி தொகுதி மேரா யுவ பாரத் ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்டன், பிரபு, அமுதா ஆகியோா் செய்திருந்தனா்.

