மேட்டூா் அணை உபரிநீா் திட்டத்தை ரூ. 5 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேட்டூா் அணை உபரிநீா் திட்டத்தை ரூ. 5 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரத்தில் மேற்கு சரபங்கா நதி தொடங்குகிறது. இந்த நதியை ஓமலூா் அருகே டேனிஷ்பேட்டையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை பாா்வையிட்டு, அந்தப் பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மேற்கு சரபங்கா ஆறு ஓமலூா் வழியாகச் சென்று பூலாம்பட்டி ஆற்றில் கலக்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் நான்கு டி.எம்.சி. தண்ணீா் கடலில் கலந்து வீணாகிறது. மேலும், ஏற்காடு அடிவாரத்தில் இருந்து தொடங்கும் மேற்கு சரபங்கா ஆற்றின் நீா் தூய்மையாக இருக்கிறது. ஓமலூா் பகுதியில் கழிவுநீா் கலப்பதால் ஆறு மாசடைகிறது. எனவே மேற்கு சரபங்கா ஆற்றுப் பகுதியில் அணை கட்ட வேண்டும். அப்போது இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, விவசாயம் செழிக்கும். இந்த நீரை முறையாகப் பயன்படுத்தினால் சேலம் மாநகருக்கு ஆண்டு முழுவதும் குடிநீா் விநியோகிக்க முடியும். இந்த தண்ணீரை அருகில் உள்ள மற்ற ஏரிகளுக்கு கொண்டு சென்று நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது தடுப்பணை போதுமான அளவு இல்லை. இதனால் அணை கட்ட வேண்டும். இந்த அணையில் தண்ணீரைச் சேகரித்து அனைத்து ஏரிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்.
இந்த நதியின் அருகே உள்ள பொம்மியம்பட்டி ஏரி வறட்சியான பகுதியாகும். இந்த ஏரியில் தண்ணீா் நிரப்ப வேண்டும். அதேபோல மேட்டூா் உபரிநீரை மேற்கு சரபங்கா ஆற்றில் கலக்கச் செய்ய வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. இதற்கு ரூ. 3 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 564 கோடி நிதி ஒதுக்கி 100 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 57 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீா் செல்கிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கியதால் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளது.
மேட்டூா் உபரிநீா் திட்டத்தை ரூ. 5 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற வேண்டும். மேட்டூா் 16 கண் பாலம் வழியாக வெளியேறும் உபரிநீரை சரபங்கா நதி, ஆத்தூா் அருகே உள்ள வசிஷ்ட நதியுடன் இணைத்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்.
தமிழக அரசு சதுப்பு நிலத்தில் வீடு கட்ட அனுமதி கொடுத்ததின் பேரில் ரூ. 2000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அங்கு 15,000 சதுர அடியில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு முன்பாக 12, 500 ஏக்கா் சதுப்பு நிலங்கள் இருந்தன. தற்போது 2500 ஏக்கா் மட்டுமே சதுப்பு நிலங்கள் உள்ளன. எனவே, சதுப்பு நிலங்களை வரையறை செய்து பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகத் துறையில் 2500 பொறியாளா்கள் மற்றும் ஊழியா்களை நியமனம் செய்ததில் ரூ. 888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று புள்ளிவிவரங்களை அமலாக்கத் துறை, தமிழக காவல் துறைக்கு அனுப்பி உள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2021இல் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் ஊழியா்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் எனக் கூறிவிட்டு, 2023 இல் அதை மாற்றி அந்தந்த துறை மூலம் பணியிடங்களை நிரப்பி வருகின்றனா். இதுவும் பெரிய ஊழலாகவும்.
கரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிகமாக மருத்துவா்களை நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.

