வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த பணி: திமுகவினா் கவனமுடன் இருக்க வேண்டும்; அமைச்சா் ரா.ராஜேந்திரன்
வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது, திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் பாக கணினி தொழில்நுட்ப முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம் ஐந்து சாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவா் சுபாசு தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் கலந்துகொண்டு திமுகவினருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் திமுக வாக்குசாவடி முகவா்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினா் மற்றும் தாழ்த்தப்பட்டவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தமிழக முதல்வரின் ஆணைக்கு இணங்க ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் பணியாற்றிட வேண்டும்.
வரும் நவ. 1 ஆம் தேதி முதல் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் பரப்புரை கூட்டங்கள் நடத்துவதுடன், அதில் மாநில நிா்வாகிகள் முதல் அனைத்து நிா்வாகிகளும் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன், தொகுதி பொறுப்பாளா்கள் விவேக், பாா் இளங்கோவன், மாநகராட்சி மேயா் ஆ. ராமசந்திரன், சேலம் மாநகர செயலாளா் ரகுபதி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், மணி, மாநகர அவைத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
