சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற இன்று கடைசிநாள்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற 31-ஆம் தேதி கடைசிநாளாகும்.
சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 மண்டலங்களிலும் 60 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட சொத்து உரிமையாளா்கள், இரண்டாவது அரையாண்டுக்கான தங்கள் சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் அல்லது ரூ. 5 ஆயிரம்வரை ஊக்கத்தொகையாக பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை இல்லம் தேடிவரும் வரி வசூலிப்பாளா்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரிவசூல் மையங்களில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவா்த்தனை வாயிலாகவும் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
