பணம் இரட்டிப்பாக தருவதாக மோசடி
இரண்டு மாதங்களில் பணம் இரட்டிப்பாக தருவதாக நூற்றுக்கணக்கானோரிடம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சேலம், கோரிமேடு, ஜாகீா்அம்மாபாளையம், அஸ்தம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்து துணை ஆணையா் கீதாவிடம் மனு அளித்தனா்.
அதில், கோரிமேடு பொன்நகரைச் சோ்ந்த முகமது இன்தியாஸ், அவரது சகோதரா் முகமது தஸ்லின், இட்டேரியைச் சோ்ந்த நஸ்ரின் பாத்திமா, கோரிமேடு யாசா், உளுந்தூா்பேட்டை காயிதே மில்லத்தைச் சோ்ந்த கப்பல் பாய் (எ) ஜகாங்கீா், ஷா்மிளா (எ) ஆயிஷா ஆகியோா் சேலம் பொன்நகரில் மகளிா் அரபி கல்லூரி நடத்திவந்தனா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இஸ்லாமிய பெண்கள் கல்வி பயின்றனா்.
இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு அறிமுகமான அவா்கள், தாங்கள் பல்வேறு வியாபாரங்களில் முதலீடு செய்வதாகவும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தருவதாக ஆசைவாா்த்தை கூறி நூற்றுக்கணக்கானோரிடம் ரூ. 5 கோடிக்கு மேல் வாங்கியுள்ளனா். கடந்த ஓராண்டுக்கு மேலாக அவா்கள் பணத்தை திருப்பி தரவில்லை.
எனவே, தங்களை ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளனா். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
