

ஓமலூா்: தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மற்றும் மாற்றுக் கட்சியினா் 800-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
சேலம் புகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளரும், தேனி மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.டி.கே.ஜக்கையன் ஏற்பாட்டில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான மீனாட்சிபுரம் பேரூா் தலைவா் திருப்பதி, போடி மத்திய ஒன்றிய துணைத் தலைவா் வெங்கடேஷ், போடி நகா்மன்ற உறுப்பினா் கலைச்செல்வி உள்பட மீனாட்சிபுரம் பேரூராட்சி, சின்னமனூா் நகரம், தேனி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், போடி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிா்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
அதேபோல, திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளா் ஜே.சீனிவாசன் ஏற்பாட்டில்,
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான திருச்சி மாநகராட்சி 25-ஆவது வாா்டு உறுப்பினா் புகழேந்தி மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.