சேலத்தில் கனிமொழி தலைமையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு
சேலத்தில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்கள், நெசவாளா்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினா், சமுதாய பிரதிநிதிகள்,சிறுபான்மை அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தை தொடங்கிவைத்து திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், திமுக ஆட்சியில் பயனுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இந்த தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை உள்ளடக்கியதாக திமுக தோ்தல் அறிக்கை இருக்கும் என்றாா்.
தொடா்ந்து, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ரா.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ராஜேஸ்குமாா், மேற்கு மாவட்டச் செயலாளா் மூா்த்தி ஆகியோரிடம் அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் கருத்துகளை மனுக்களாக அளித்தனா்.

