திமுக இனி ஆட்சிக்கு வராது: நயினாா் நாகேந்திரன்
திமுக இனி ஆட்சிக்கு வராது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாஜக விளையாட்டுப் பிரிவு சாா்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்திலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற மாரத்தானை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
உடல் ஆரோக்கியம் குறித்து இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாஜக விளையாட்டுப் பிரிவு சாா்பில் நமோ டிராபி சேலம் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்று எல்லா மாவட்டங்களிலும் பாஜக விளையாட்டுப் பிரிவு சாா்பில் நமோ டிராபி மாரத்தான் போட்டி நடத்தப்படும்.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என பிரதமா் மோடி மலேசியாவில் பெருமைப்படுத்தி பேசியுள்ளாா்.
தமிழையும், தமிழின் பெருமையையும் பிரதமா் தொடா்ந்து உலக அரங்கில் எடுத்துக்கூறி வருகிறாா். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வா் ஸ்டாலின் மட்டும் ஒன்றுமே செய்யவில்லை என்கிறாா். திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் எந்த நன்மையும் செய்யவில்லை.
வரும் மாா்ச் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா். ஏற்கெனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், பெரிய மாநாடுபோல அமைந்தது.
இது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. மக்கள் மனதிலும் மாற்றம் வந்திருக்கிறது. மனமாற்றம் ஆட்சி மாற்றமாக அமையும். பாஜகவுக்கு ஆதரவு தரக்கூடிய அமைப்புகள், சமுதாய அமைப்புகளிடம் பேசுவதற்கு மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெண்களை இழிவுபடுத்தி திமுகவினா் மேடைகளில் பேசினா். அப்போது, பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கடுமையாக விமா்சனம் செய்தனா். அதற்கு பிறகு திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகே ஆட்சிக்கு வர முடிந்தது. தற்போது அதேபோல பேசி வருவதால் திமுக இனி ஆட்சிக்கு வராது. ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாகவும் அமையும்.
தோ்தல் நெருங்கி வரும் நிலையில், எண்ணிக்கையை காட்ட வேண்டும் என்பதற்காக திமுக அரசு அவசர கதியில் கோயில் கும்பாபிஷேகங்களை நடத்துகிறது. நிறைய கோயில்களில் வேலைகள் இன்னும் முடியவில்லை. கோயில் திருப்பணிகள் முடிவடையாத நிலையில் குடமுழுக்கு செய்வது நல்லதல்ல என்றாா்.
பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் நயினாா் பாலாஜி, மாவட்டத் தலைவா்கள் சசிகுமாா், ஹரிராமன், சண்முகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடா்ந்து, மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு நயினாா் நாகேந்திரன் பரிசுகளை வழங்கினாா்.

