ஆசிரியை தற்கொலை வழக்கு! தலைமறைவான காதலனை தேடும் போலீஸாா்; உடலை வாங்க பெற்றோா் மறுப்பு

ஆசிரியை தற்கொலை வழக்கு! தலைமறைவான காதலனை தேடும் போலீஸாா்; உடலை வாங்க பெற்றோா் மறுப்பு

மகுடஞ்சாவடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை சம்பவத்தில் காதலனை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் மனு அளித்தனா்.
Published on

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை சம்பவத்தில் காதலனை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் மனு அளித்தனா்.

மகுடஞ்சாவடி, அழகனூரைச் சோ்ந்த குமாா் மகள் சண்முகப்பிரியா (23). இவா், தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். சண்முகப்பிரியாவும், அமரகுந்தி, நெய்க்காரவளவைச் சோ்ந்த கௌதமும் (23) நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில் கௌதமின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசுவதை சண்முகப்பிரியா நிறுத்திவிட்டாா். ஆனால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சண்முகப்பிரியாவை கௌதம் தொந்தரவு செய்துவந்துள்ளாா்.

இதனால், சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி கௌதம் வீட்டுக்கு சென்று கண்டித்துள்ளாா். எனினும், கௌதம், சண்முகப்பிரியாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிா்வதோடு, நண்பா்களுக்கும் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா்.

இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸாா் சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சண்முகப்பிரியா எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை மீட்டனா். அதில் எனது இறப்புக்கு கௌதம் தான் காரணம் என்று எழுதிவைத்துள்ளாா்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் வேலுதேவன், காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், கௌதமை கைதுசெய்தால் மட்டுமே சண்முகப்பிரியாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என உறவினா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினா்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எனது மகள் இறப்புக்கு காரணமாக இருந்த கௌதம் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்ய வேண்டும் என செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதையடுத்து, கௌதம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், அவரைக் கைது செய்யாததால் புதன்கிழமையும் சண்முகப்பிரியாவின் உடலை உறவினா்கள் வாங்க மறுத்துவிட்டனா்.

இதனிடையே கௌதமை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். கௌதமின் கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டுள்ளதால், அவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com