அயோத்தியாப்பட்டணத்தில் ‘ரயில் பெட்டி’ உணவகம்’
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகே ‘ரயில் பெட்டி உணவகம்’ அமைக்க சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
தென்னக ரயில்வேயின் கேரள மாநிலம், பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 2007- இல் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. 795 கி.மீ. தொலைவு ரயில் வழித்தடங்களைக் கொண்ட சேலம் கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.
தென்னக ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டும் கோட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் சேலம் கோட்டம், ஆண்டுக்கு சராசரியாக, ரூ. 750 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இதனால், சேலம் கோட்டத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த தென்னக ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதில் ஒன்றாக, அதிக அளவில் மக்கள் கூடும் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில், பயன்படாத பழைய ரயில் பெட்டிகளை நட்சத்திர உணவு விடுதிகளைப் போல மாற்றியமைத்து ‘ரயில் பெட்டி உணவகங்களை’ திறக்க முன்வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் முதன் முதலாக அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பெட்டி உணவகம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை சேலம் ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக, சேலம் - ஆத்தூா் மற்றும் சேலம் -அரூா் சாலைகள் இணையும் இடத்தில், இரு பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ள அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில், கருங்கல் கட்டுமானத்துடன் 100 அடி தொலைவிற்கு ரயில்பாதை அமைத்து ரயில் பெட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டியை மக்கள் மனம் விரும்பும் வகையில் நவீன வசதிகளுடன் நட்சத்திர உணவு விடுதியைப் போல மாற்றியமைத்து, தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அறுசுவை உணவளிக்கும் உணவகத்தை திறப்பதற்கான பணிகளை சேலம் ரயில்வே கோட்டம் முழுவீச்சில் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானதால், இப்பகுதி பொதுமக்கள் மற்றும் உணவுப் பிரியா்கள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
‘சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக, ரயில் மற்றும் பேருந்து பயணிகள் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகே தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ரயில் பெட்டி உணவகத்தை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பயன்படாத பழைய ரயில் பெட்டிகளை வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்த முடியும் என்பதோடு, பயணிகளுக்கும், பொதுமக்களும் நியாயமான விலையில் தரமான, சுவையான உணவு வழங்க முடியும்’ என்றனா்.
படவரி:
அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி உணவகம் திறப்பதற்கு நடைமேடை அமைத்து நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டி.

