தடுமாறிக் கொண்டிருக்கிறது திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணி தடுமாறிக் கொண்டிருக்கிறது; தோ்தல் வரை அந்தக் கூட்டணி நிலைக்குமா என தெரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசினாா்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
181 ஆவது தொகுதியாக சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:
வரும் தோ்தலில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை பலமுறை நிரூபித்து காட்டியுள்ளோம். 2011, 2016, 2021இல் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற மாவட்டம் சேலம். தமிழகத்தை வேண்டுமானால் ஸ்டாலின் ஆளலாம். ஆனால், சேலத்தை ஆள்வது அதிமுக தான்.
நான்கரை ஆண்டுகள் தூங்கிவிட்டு, ஸ்டாலின் இப்போதுதான் மக்களைப் பற்றி சிந்திக்கிறாா். மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால், புதியபுதிய திட்டங்களை அறிவிக்கிறாா். தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறிவிட்டது. விவசாயிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் என அனைவரும் போராடுகின்றனா்.
தமிழகத்தில் 6,999 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சரே சொல்கிறாா். தமிழகத்தில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, மூதாட்டிகளுக்கு என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இளைஞா்கள், மாணவா்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி சீரழிகின்றனா். இதுவரை சட்டம் -ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை. நாட்டு மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
திமுக அரசியல் கட்சி அல்ல. அது ஒரு நிறுவனம். சாதாரணத் தொண்டா்கள்கூட அதிமுகவில் உயா்பதவிக்கு வரலாம். திமுகவில் அப்படி யாரும் வரமுடியாது. குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம் என்ற நிலையை மாற்ற, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
சுயஉதவிக் குழு எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ரூ. 44 கோடி ஒதுக்கி இருக்கின்றனா். 2 மாதங்களில் எப்படி ஆய்வு செய்ய முடியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.
வரும் தோ்தலில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். பெரும்பான்மை தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று, நூறுநாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதிலும் பொய்யான செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடப் பாா்க்கிறாா்கள்.
அதிமுக ஆட்சி அமைந்ததும், நூறுநாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயா்த்துவோம். மக்கள் செல்வாக்கு இழந்துவிட்ட நிலையில், 17 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தோல்விப் பயத்தில்தான் விதிகளை தளா்த்தியுள்ளனா்.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு தீபாவளிக்கும் மகளிருக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு மோட்டாா் சைக்கிள் வாங்க மானியம் வழங்கப்படும். முதியவா்களுக்கு உதவித்தொகை இல்லம்தேடி கொடுக்கப்படும்.
உறுதிபடுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக தற்போது அறிவித்துள்ளது. அரசு ஊழியா்களையும் திமுக அரசு ஏமாற்றி வருகிறது.
திமுக கூட்டணியில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தோ்தல் வரும் வரை திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் இருக்குமா எனத் தெரியவில்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைவது 100 சதவீதம் உறுதி என்றாா்.
கூட்டத்தில், அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ். பாலு, எம்எல்ஏக்கள் ராஜமுத்து (வீரபாண்டி), பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), மணி ( ஓமலூா்), சித்ரா (ஏற்காடு), ஜெயசங்கரன் (ஆத்தூா்), நல்லதம்பி (கெங்கவல்லி), சுந்தரராஜன் (சங்ககிரி), அமைப்புச் செயலாளா் செம்மலை, சந்திரசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

