கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை
சேலம் எருமாபாளையம் பகுதியில் கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், ஒன்பதாம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த அருள் - பாக்கியவதி தம்பதி மகன் சந்துரு (14), அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அருள் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 5 மணியளவில் தனது தாயை அவா் பணிபுரியும் நூற்பாலையில் விட்டுவிட்டு வீடுதிரும்பிய சந்துரு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில், கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், சந்துரு மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
