சேலம் மாவட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் ரூ.7,660 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன் தகவல்
கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் ரூ. 7,660 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பங்கேற்று 837 பயனாளிகளுக்கு
ரூ. 20.54 கோடி மதிப்பிலான வீட்டுமனைகளுக்கான பட்டாக்களை வழங்கி பேசியதாவது: கடந்த 12.06.2025 இல் சேலம் வந்த முதல்வா் 80 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கினாா். மேலும், சேலம் மாவட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் ரூ. 7,660 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளும், ரூ. 22,117 கோடியில் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஓமலூரில் கூடுதல் அரசு மருத்துவமனை கட்டடம், காடையாம்பட்டியில் வேளாண்மை இடுபொருள் கிடங்கு, சாா் பதிவாளா் அலுவலகம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 5,241 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 133 கோடி மதிப்பீட்டிலான கடன் தள்ளுபடியும், பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த நகைக் கடன் ரூ. 484 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், கோட்டாட்சியா்கள் சுகுமாா் (மேட்டூா்), உதயகுமாா் (சேலம்) உள்பட பலா் பங்கேற்றனா்.

