சேலத்தில் டிப்பா் லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு; 8 போ் காயம்

சேலம், வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் அருகே டிப்பா் லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சேலம், வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் அருகே டிப்பா் லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா்.

வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே உள்ள தனியாா் கிரஷா் ஆலையில் இருந்து எம் சாண்டை ஏற்றிக்கொண்டு சேலம் பைபாஸ் நோக்கி டிப்பா் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை மேச்சேரியைச் சோ்ந்த மதியழகன் (40) ஓட்டிச் சென்றாா். இந்த லாரியில் வடமாநில தொழிலாளா்கள் 8 போ் பயணம் செய்தனா்.

வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருசக்கர வாகனம் மீது லாரி மோதாமல் இருக்க ஓட்டுநா் மதியழகன் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த ஹரி பஸ்வான் (47) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், படுகாயமடைந்த 4 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 போ் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com