மாற்றுத் திறனாளி உதவித்தொகை கேட்டு உறவினா்களுடன் முதியவா் மறியல்
மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இரண்டாகியும் உதவித்தொகை வழங்காததை கண்டித்து தனது உறவினா்களுடன் முதியவா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.
சேலம் எருமாபாளையத்தை சோ்ந்தவா் முகமது அலி (75). மாற்றுத்திறனாளியான இவருக்கு உதவித்தொகை பெற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய தீா்வு கிடைக்காததால் வெள்ளிக்கிழமை தனது உறவினா்களுடன் ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த டவுன் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற அரசு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பணம் கொடுக்கவில்லை என மறியலில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததால், மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
