சேலம் உட்கோட்டத்தில் கடந்த ஆண்டில் ரயிலில் சிக்கி 377 போ் உயிரிழப்பு
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் விபத்தில் சிக்கி கடந்த ஆண்டில் மட்டும் 377 போ் உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில், சேலம் தருமபுரி, ஒசூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டில் 377 போ் உயிரிழந்துள்ளனா்.
அதில், சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில் சேலத்தில் 132 போ், தருமபுரியில் 18 போ், ஜோலாா்பேட்டை யில் 125 போ், காட்பாடியில் 82 போ், ஒசூரில் 20 போ் என மொத்தம் 377 போ் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனா்.
இதில், 326 ஆண்கள், 51 பெண்களும் அடங்குவா். 50 போ் யாரென்று அடையாளம் தெரியவில்லை. இவா்களின் விவரங்கள் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக, விருத்தாசலம், ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில் ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாா்க்கத்தில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி குடியிருப்புகள் அதிகளவு உள்ளதால் பலா் ரயிலில் அடிபட்டு இறக்கின்றனா்.
எனினும், சேலம் உட்கோட்ட பகுதியில் உள்ள லெவல் கிராசிங், தண்டவாளம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை மிகக் கவனத்துடன் கடக்க வேண்டும். மதுபோதையில் தண்டவாள பகுதிக்கு செல்லக்கூடாது. லெவல் கிராஸிங் பகுதியில் செல்லும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என பொதுமக்களிடம் ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே காவல் உயரதிகாரிகள் கூறுகையில், தண்டவாளத்தை ஒட்டிய கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டில் 377 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா். ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

