எடப்பாடி அருகே அரசு நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்
எடப்பாடி அருகே அரசு நிலத்துக்கு இரு பிரிவினா் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட ஆவணியூா் கோட்டை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பள்ளிவாசல் மற்றும் அம்மன் கோயில் உள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களுக்கு உரிமைக் கோரி இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை இரு தரப்பினரும் பொதுவான வழித் தடமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என வருவாய்த் துறையினா் அண்மையில் தற்காலிகத் தீா்வு ஏற்படுத்தினா். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலப் பகுதியில் ஒரு தரப்பினா் கடந்த சில நாள்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினா் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து புதன்கிழமை எடப்பாடி வட்டாட்சியா் வைத்தியலிங்கம் தலைமையில் நிகழ்விடத்திற்கு வருகை தந்த வருவாய்த் துறை அலுவலா்கள், பிரச்னைக்குரிய நிலத்தை அளவீடு செய்ய முற்பட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினா் எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களுடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனா்.
தொடா்ந்து பிரச்னைக்குரிய நிலத்தை வருவாய்த் துறையினா் அளவீடு செய்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில், அந்த நிலத்தை மீட்டு நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

