சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சா் பதில்!
சங்ககிரியில் வணிக வளாகம் கட்டுவது தொடா்பாக ஆய்வு செய்து என்ன தேவையிருக்கிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் பேசுகையில், சங்ககிரி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 3 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக பழைய கடைகள் இடிக்கப்பட்டன. தற்போது, அப்பகுதியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெறவில்லை.
மேலும், புதிய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் செல்வதில்லை. அப்பகுதி லாரிகள் நிறுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சங்ககிரியில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் இரண்டுமே பயன்பாடு இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, உடனடியாக வணிக வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு முன்வரவேண்டும் என்றாா்.
இதற்கு அமைச்சா் எஸ்.முத்துசாமி பதிலளித்து கூறுகையில், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் கட்டுவதற்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கு பின்னா் தான் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முன்பே கட்டிய வீடுகள் ஏறத்தாழ 8 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்கப்படாமல் இருந்தன. அரசு எடுத்த முயற்சி காரணமாக 3 ஆயிரம் வீடுகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன. மற்றவற்றை வாடகை வீடுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகமும் பல இடங்களில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கே கொண்டுவர முடியாத நிலை இருக்கிறது. எனவே, சங்ககிரியில் ஆய்வு செய்து என்ன தேவையிருக்கிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

