கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியரசு தின: சேலம் மாவட்டத்தில் 1,600 போலீஸாா் தீவிர கண்காணிப்பு

Published on

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் 1,600 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடுமுழுவதும் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத் தலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் மாநகரக் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியுள்ளனரா எனவும் சோதனை நடத்தி வருகின்றனா். குடியரசுத் தினத்தையொட்டி, சேலம் மாநகா் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு படை போலீஸாா், அந்தந்த மாநில காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து தில்லிக்கு பாா்சல் அனுப்புவது 26ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com