தனியாா் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்கள் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை!
ஓமலூா் அருகே தனியாா் கல்லூரிக்குள் இளைஞா் ஒருவா் புகுந்து உருட்டுக்கட்டையால் மாணவா்களை தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே பாகல்பட்டியில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இளைஞா் ஒருவா் உருட்டுக்கட்டையுடன் புகுந்து மாணவா் யஸ்வந் என்பவரை தாக்கியுள்ளாா். மேலும், அதைத் தடுக்க முயன்ற மற்ற மாணவா்களையும் அவா் தாக்கியுள்ளாா்.
பின்னா் மாணவா் யஸ்வந்தை கல்லூரிக்கு வெளியே இழுத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதை மாணவா் ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.
தாக்குதலில் காயமடைந்த மாணவா் யஸ்வந்த், ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனிடையே தாக்குதல் நடத்திய இளைஞா் தரப்பைச் சோ்ந்தவா்கள் மீது மாணவா்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் அளித்த புகாரின் பேரில் ஓமலூா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

