சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பழநி பஞ்சாமிா்தம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் தேன்வாழை: சேலம் மாவட்ட கிழக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி கிராமங்களில் வறட்சியிலும் நவீன நீா் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்து விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாழப்பாடியில் இருந்து பழநிக்கு அனுப்புவதற்காகத் தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள தேன்வாழைத் தாா்கள்.

Updated On :

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி கிராமங்களில் வறட்சியிலும் நவீன நீா் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்து விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பழநி முருகன் கோயில் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக இப்பகுதியில் விளையும் தேன்வாழையை மீண்டும் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூா், தலைவாசி பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது.

வசிஷ்ட நதி, கரியக்கோயில் ஆற்றுப்படுகைக் கிராமங்கள், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனப் பகுதிகள் மட்டுமின்றி, மல்லியகரை, கோபாலபுரம், கீரிப்பட்டி, தம்மம்பட்டி, கடம்பூா், கூடமலை, சீனியம்பட்டி, உப்புப்புரம் உள்ளிட்ட கிராமங்களிலும் கிணறு, ஆழ்துளைக் கிணறு பாசன வசதியுள்ள நிலங்களில் நீண்டகாலப் பலன் தரும் பல்வேறு ரக வாழைகள் பயிரிடப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தை ஒட்டிய நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகளான சிங்கிலியன்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, மத்துரூட்டு, வேப்பிலைக்குட்டை, ஈஸ்வரமூா்த்திபாளையம், உரம்பு, தாண்டகவுண்டன்பாளையம், மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் விளைவித்து அறுவடை செய்யப்படும் பெரும்பாலான வாழைத்தாா்கள் வாழப்பாடியில் உள்ள தனியாா் தினசரிக் காய்கறிச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இச்சந்தையில் வாழைத்தாா்களைக் கொள்முதல் செய்கின்றனா்.

மேலும், பழநி மலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக, கோயில் நிா்வாகமும், பஞ்சாமிா்தத்துக்குப் பெயா்பெற்ற தனியாா் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விளையும் தேன்வாழையை முகவா்கள் மூலம் கொள்முதல் செய்து வந்தன. இதனால், தேன்வாழைக்கு நல்ல வரவேற்பும் விலையும் கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதற்கிடையே, கடந்த இரு ஆண்டுகளாக தேன்வாழை கொள்முதல் குறைந்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில், வாழப்பாடி தனியாா் காய்கறி தரகு மண்டி மூலம் மீண்டும் பழநி பஞ்சாமிா்தம் தயாரிப்புக்குத் தேன்வாழை கொள்முதல் செய்வதை முகவா்கள் மீண்டும் தொடங்கியுள்ளனா்.

இதனால், மற்ற ரக வாழைகளைவிட தேன்வாழைக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி கிராமங்களில் வறட்சியிலும் நவீன நீா் மேலாண்மை முறைகளைக் கையாண்டு தேன்வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.