சேலம் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த 3 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை

ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்

Updated On :

சேலம் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த 3 சிறுவா்களை பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலம் - ஈரோடு மாா்க்கத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சரக்கு ரயில் வந்தது. அந்த ரயில், சேலம் அருகே உள்ள நெய்காரப்பட்டி புத்தூா் என்னும் இடத்தில் வந்தபோது, தண்டவாளத்தில் சிறிய அளவிலான கற்கள் இருந்துள்ளன. அந்தக் கற்கள் மீது ஏறி ரயில் சென்றது.

தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு சரக்கு ரயிலின் லோகோ பைலட் தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா், நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் ரயில் ஏறிச் சென்றதில் உடைந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து கொண்டலாம்பட்டி போலீஸாரும் அங்கு சென்று, தண்டவாளத்தில் கற்களை வைத்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்திருந்த நபா்களில் யாரேனும், இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், மண்டபத்தில் இருந்த நங்கவள்ளியைச் சோ்ந்த 3 சிறுவா்கள், தாங்கள் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்ததை ஒப்புக்கொண்டனா். உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு வந்த அவா்கள், தண்டவாளம் அருகில் சென்று விளையாடியுள்ளனா். அப்போது, தண்டவாளத்தில் சிறிய அளவிலான கற்களை வரிசையாக அடுக்கிவைத்துள்ளனா். அந்தக் கற்கள் மீது சரக்கு ரயில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவா்கள் 3 பேரையும், அவா்களது பெற்றோரையும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அந்தச் சிறுவா்கள் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தில் செயல்படவில்லை என்றும், விளையாட்டாக தண்டவாளத்தில் சிறிய அளவிலான கற்களை அடுக்கிவைத்ததும் தெரியவந்தது. அவா்கள் பள்ளியில் பயிலும் 16, 17 வயது சிறுவா்களாக இருப்பதால் அவா்களை கடுமையாக எச்சரித்து போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.