சிதம்பர ஈஸ்வரர் கோயில் சீரமைக்கப்படுமா?

வத்தலகுண்டு, அக். 11:  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் பாண்டிய மன்னர்களால் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயில் புனரமைக்கப்படுமா என, அப் பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ள

வத்தலகுண்டு, அக். 11:  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் பாண்டிய மன்னர்களால் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயில் புனரமைக்கப்படுமா என, அப் பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  வத்தலகுண்டு-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயில். இக்கோயிலில், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் ஆதாரமாக உள்ளது.

  இக் கோயில் சுற்றுப்புறச் சுவர்களில், சிவபெருமானின் 64 திருவிளையாடல் சிற்பங்கள் காணப்படுகின்றன.

  இக் கோயிலில் உள்ள நந்தி, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நந்தியாகும்.

  இக் கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா, சங்க நதி, பதும நதி உள்பட பல்வேறு கோயில்கள் சங்ககால ஆகம விதிபடி "ஓம்' என்ற அட்சரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  குபேரன் தமது சொத்துகளை எல்லாம் இழந்து, இக் கோயிலுக்கு வந்து தவமிருந்து இழந்த சொத்துகளை மீட்டதாக வரலாறு.

  அதற்கு ஆதாரமாக, இக் கோயில் கர்ப்ப கிரகத்தில், குபேர பீடம் மேற்கூரையில் அமையப் பெற்றுள்ளது.

  கோயிலுக்குள் வில்வ மரங்கள் உள்பட, பல்வேறு மரங்கள் உள்ளன.

  கருங்கற்களால் கட்டப்பட்ட இக் கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் முன்புறம் வஞ்சி ஓடை செல்கிறது.

  தற்போது 100 வயதான சிதம்பரம் பூசாரி என்பவர் இக்கோயிலைப் பராமரித்து வருகிறார். அவருக்குத் துணையாக அவரது 3 மகன்கள் உள்ளனர்.

  சிதம்பரம் பூசாரி தங்கியுள்ள ஊர், இவர்களது முன்னோர்களாலும், இவராலும் பூசாரிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

  இக் கோயிலில் பல சிலைகள் சிதிலமடைந்துள்ளன. மேற்கூரையின்றி கோயில் ஓரங்களில் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், வெயிலிலும், மழையிலும் காய்ந்து கிடக்கின்றன.

  இப் பகுதி மக்களின் நன்கொடையால் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இருந்தபோதிலும், சிதிலமடைந்த சிலைகளுக்கு பீடம் மற்றும் மேற்கூரை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளன.

  இக் கோயிலில் மகாசிவராத்திரியின்போது 3 நாள்கள் திருவிழா நடைபெறும். மாதத்தில், இரு பிரதோஷ தினங்களில் விசேஷ வழிபாடு நடைபெறும்.

  வெளிநாட்டில் இருந்தும்கூட இக் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர்.

  சென்னை, பெங்களூரில் இருந்து அதிகமானோர் வருகின்றனர்.

  சிறப்புவாய்ந்த இக்கோயிலுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால், மழைக் காலங்களில் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

  இக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், குபேரனைப் போல இழந்ததைப் பெறலாம் எனப் பக்தர்கள் கூறுகின்றனர்.

  வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையும், பெருமையும் வாய்ந்த கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com