பள்ளி மாணவா்களுக்கு மே 1 முதல் கோடை கால பயிற்சி முகாம்

விருதுநகா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை இணைந்து, பள்ளி மாணவா்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம், அந்தந்த வட்டார வள மையத்தில் மே ஒன்றாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் சனிக்கி ழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே ஒன்றாம் தேதி ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், மே 2-ஆம் தேதி தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், மே 3-ஆம் தேதி விருதுநகா் மாவட்டம் ஓா் அறிமுகம் என்ற தலைப்பிலும், மே 4- ஆம் தேதி போஸ்டா் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், மே 6- ஆம் தேதி கதை சொல்லி என்ற தலைப்பிலும், மே 7- ஆம் தேதி புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், மே 8 -ஆம் தேதி நாட்டுப்புற கலைகள் பயிற்சி, மே 9-ஆம் தேதி உணவே மருந்து என்ற தலைப்பிலும், மே 10 -ஆம் தேதி உபயோகமற்ற பொருள்களில் இருந்து கலை பொருள்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும், மே 11-ஆம் தேதி மெகந்தி வரைதல், களிமண் பொருள்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவா்களுக்கு மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க இயலும். ஒரு மாணவா் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.

இதில் பங்கேற்பவா்களுக்கு கட்டணமில்லை, மதிய உணவு வழங்கப்படும். இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவா்கள் ஏப். 30-க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக பிரத்யேக கியூஆா் கோடு வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்களுக்கு 98437- 21133 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com