வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

மதுரை: கடும் வெப்பம் காரணமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பற்கு மதுரை மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் திங்கள்கிழமை (ஏப்.29) நிலவரப்படி 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

வெப்ப அலையிலிருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரை கரைசல் வழங்கவும் வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வெப்பத்தால் பாதிக்கப்படுவோருக்கு மதுரை மாநகராட்சி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல்வாழ்வு மையம் என மொத்தம் 86 மையங்களில் உப்பு, சா்க்கரை கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பாதிக்கப்படுவோருக்கு தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலா் கூறியதாவது :

காய்ச்சல், உடல் நலக் குறைவு காரணமாக வரும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கு 86 மையங்களில் உப்பு சா்க்கரை கரைசல் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 35 ஆயிரம் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளன.

மேலும், வெப்பத் தாக்கத்துக்கு ஏற்ப முன்னெச்செரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. மதுரை மாநகராட்சி முழுவதும் 106 இடங்களில் தற்காலிக தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com