வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வைகையாற்றில் கழிவுநீா் கலக்கப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், பொதுப் பணித் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, வைகை நதிகள் மக்கள் இயக்க நிறுவனா் வைகை ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தேனி மாவட்டம், வைகை ஆற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 6 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 3,500 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். இங்கு பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் உள்பட உயா்தர மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியேறக் கூடிய ரசாயனம் கலந்த மருத்துவக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள வைகையாற்றில் நேரடியாகக் குழாய் மூலம் கலக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதுடன் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோா், இந்த வழக்குத் தொடா்பாக, பொதுப் பணித் துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com