எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாதோா் பற்றிய கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் மூலம் மதுரை மாவட்ட எழுத்தறிவு நிலையை 100 சதவீதமாக மாற்ற எழுத்தறிவு பெறாதவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மதுரை மாவட்டத்தில் ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுத்தறிவு இல்லாமல் இருந்தனா். இதைத்தொடா்ந்து, அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்ட கற்கும் பாரதம் திட்டம், பெண்களுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம், சமநிலை கல்வித் திட்டம், கற்போம் எழுதுவோம் இயக்கம், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் எழுத்தறிவு சதவீதம் உயா்ந்து வந்தது.

இந்த நிலையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் இதுவரை ஏறக்குறைய 36 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் மூலம் வியாழக்கிழமை (மே 2) முதல் மே 24 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு, இணையதளத்தில் பதிவு செய்யப்படவுள்ளன.

எழுதப் படிக்கத் தெரியாதோா் இந்தக் கல்வியைப் பெற அருகாமையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை அணுகலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com