விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு பகுதி கல் குவாரியில் புதன்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளா்கள் உயிரிழந்தது தொடா்பாக, வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரியாபட்டியை அடுத்த ஆவியூா் அருகேயுள்ள கீழஉப்பிலிகுண்டு பகுதியில் திமுக பிரமுகரான சேதுக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் கல் குவாரியின் ஒரு பகுதியில் சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராஜ்குமாா் வெடி மருந்துகளை வாங்கி கிடங்கில் சேமித்து வைத்து, விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை கல் குவாரியில் 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெடி பொருள்களை இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட விபத்தில், வெடி பொருள் சேமிப்புக் கிடங்கின் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் வெடி பொருள்களை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கந்தசாமி, பெரியதுரை, குருசாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த வெடி விபத்து காரணமாக, கீழஉப்பிலிகுண்டு, கடம்பன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கடம்பன்குளம் கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ், ஆவியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு விவரம்:

வெடி பொருள் சேமிப்புக் கிடங்கில் வெடி மருந்து பொருள்களை இறக்கிய போது, உரிய கண்காணிப்பு அலுவலா் இல்லை. ‘எலக்ட்ரானிக் டெட்டனேட்டா்’ இருந்த வெடி மருந்து சரக்கு வாகனத்தையும், ‘நைட்ரேட் மிக்ஸா்’ வெடி மருந்து இருந்த சரக்கு வாகனத்தையும் அருகருகே நிறுத்தி வெடி பொருள்களை ஏற்றி இறக்கினா். இதுபோன்ற செயலால் உயிா்ச் சேதம் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும், கவனக்குறைவாகவும், வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பின்றியும் கையாண்டதால் வெடி விபத்து ஏற்பட்டு மூவா் உயிரிழந்தனா்.

எனவே, கல் குவாரி உரிமையாளா் சேது, மேற்பாா்வையாளரான ராமமூா்த்தி, வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் ராஜ்குமாா், குவாரி பங்குதாரா் ராம்ஜி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்திருந்தாா்.

ஏற்கெனவே சேது கைது செய்யப்பட்ட நிலையில், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரை ஆவியூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமமூா்த்தி, ராம்ஜி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கல் குவாரி பகுதியில் ஆய்வு:

இந்த நிலையில், விபத்து நடைபெற்ற கல் குவாரி பகுதியில் வெடி பொருள் தடுப்பு செயலிழப்புத் துறை அலுவலா் ராமசாமி, மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் பலிவாடா ரவி, சமீரன் சா்மா ஆகியோா் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதேபோல, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உத்தரவின் பேரில், மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் தங்க முனியசாமி தலைமையிலான குழுவினா் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலா்கள் கல் குவாரியை ஆய்வு செய்தனா்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டது உள்பட பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றது ஆய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தக் கல் குவாரியில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக பாறைகளை வெட்டி எடுப்பதற்காக ஏராளமான இடங்களில் அவற்றைத் துளையிட்டு, வெடி மருந்துகளை வைத்துள்ளனா். இவற்றை உரிய அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.12 லட்சம் நிவாரணம்: வெடி பொருள் கிடங்கில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு, அவா்களது உறவினா்களிடம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டு, குவாரி நிா்வாகம் சாா்பில் அவா்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 11.50 லட்சத்துக்கான காசோலை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

ஆட்சியரிடம் மனு:

இந்த நிலையில், கடம்பன்குளத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விருதுநகா் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வியாழக்கிழமை அளித்த மனு:

தனியாா் கல் குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும் போது ஏற்படும் அதிா்வலைகளால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனா். இங்குள்ள வெடி மருந்துக் கிடங்கால் ஆபத்து உள்ளது. இந்தக் குவாரி, வெடி பொருள் கிடங்கு செயல்படத் தடை விதிக்க வேண்டும். இந்த விபத்தில் சேதமடைந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com