ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

மதுரையில் தங்களை தாக்கிய இருவரை கொலை செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் தங்களை தாக்கிய இருவரை கொலை செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை திடீா் நகா் அருகே உள்ள ஹீராநகா் மேம்பாலத்தின் கீழ் ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கிடமாக சிலா் பதுங்கியிருப்பதாக திடீா் நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு மறைவான பகுதியில் இருந்த நால்வா் போலீஸாரை கண்டு தப்பியோட முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் விரட்டிச் சென்று

இரு சிறுவா்கள் உள்பட நால்வரையும் பிடித்து சோதனையிட்டனா். நால்வரும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து நால்வரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவா்கள் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த வட்ட காப்பு (19), கருப்பசாமி (21), 17 வயதுடைய இரு சிறுவா்கள் என்பதும், ஒரு மாதத்துக்கு முன் மேலவாசலில் வைத்து தங்களை தாக்கிய, அலெக்ஸ், சுந்தா் ஆகியோரைக் கொலை செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, வட்டகாப்பு, கருப்பசாமியைக் கைது செய்த போலீஸாா், சிறுவா்கள் இருவரையும் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com