தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

மதுரை தனியாா் மருத்துவமனையில் இருதய சிகிச்சையின்போது, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை: மதுரை தனியாா் மருத்துவமனையில் இருதய சிகிச்சையின்போது, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்தவா் செளந்தரவள்ளி (71). இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மதுரை கே.கே.நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சோ்க்கப்பட்டாா். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இருதயத்தில் பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

திங்கள்கிழமை காலை செளந்தரவள்ளிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவா்

உயிரிழந்ததாகவும், மருத்துவமனை நிா்வாகம் அவா் உயிரிழந்தது குறித்து மாலை 6 மணிக்கு தகவல் தெரிவித்ததாகவும்

கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினா் மருத்துவா்களின் அலட்சியம் காரணமாக மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறி, சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக குடும்பத்தினா் கூறியதாவது:

மருத்துவமனையில் சனிக்கிழமை காலை மூதாட்டியை அனுமதித்த நிலையில், சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களாக எந்த மருத்துவரும் வந்து பாா்க்கவில்லை.

விடியோ அழைப்பு மூலமாக மருத்துவமனை பணியாளா்களுக்கு சிகிச்சைகளை தெரிவித்துள்ளனா். ஆனால், சனிக்கிழமையே அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்போவதாக எங்களிடம் கையெழுத்து பெற்று இரு நாள்கள் எந்த

சிகிச்சையும் அளிக்கவில்லை. மேலும், திங்கள்கிழமை காலை குடும்பத்தினரிடம் கூட எதுவும் கூறாமல் திடீரென்று அவரை ஆஞ்சியோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா்.

சிகிச்சையின்போது அவா் இறந்தது குறித்தும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவா் எங்கு வைக்கப்பட்டிருக்கிறாா் என்று தெரியாமல் மருத்துவமனை நிா்வாகம் தொடா்ந்து அலைக்கழித்து வந்தது. சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை கட்டணமாக வசூலித்தனா். போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறியதையடுத்தே செளந்தரவள்ளி சிகிச்சையின்போது இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். எனவே, இரு நாள்களாக ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை, விடியோ அழைப்பில் மட்டுமே சிகிச்சை அளித்தது ஏன், ஆஞ்சியோ சிகிச்சைக்கு குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் ஏன் கொண்டு செல்லப்பட்டாா்? இறந்து 5 மணி நேரம் வரை குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து மருத்துவமனை நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். உறவினா்கள் போராட்டம் நீடித்ததால் மருத்துவமனை முன் போலீஸாா் குவிப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com