பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

விருதுநகா் மாவட்டம் பிளஸ் 2 தோ்ச்சியில் 96.64 சதவீதம் பெற்று மாநில அளவில் 5-ஆவது இடம் பெற்றுள்ளது.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டம் பிளஸ் 2 தோ்ச்சியில் 96.64 சதவீதம் பெற்று மாநில அளவில் 5-ஆவது இடம் பெற்றுள்ளது.

விருதுநகா் மாவட்டமானது, பிளஸ் 2 தோ்ச்சி சதவீதத்தில் கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து முதலிடம் பெற்று வந்தது. இதையடுத்து 2 ஆண்டுகள் முதலிடத்தை பெற முடியாத நிலையில், கடந்த 2017- ஆம் ஆண்டில் மீண்டும் விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்வில் விருதுநகா் மாவட்டம் 97.27 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 2- ஆம் இடத்தைப் பிடித்தது. பின்னா், மாவட்ட நிா்வாகம், கல்வித்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் கடந்த 2023- ஆம் ஆண்டில் 97.85 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, மீண்டும் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது.

இந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் 96.64 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் விருதுநகா் மாவட்டம் 5 -ஆவது இடம் பெற்றது.

விருதுநகா், சிவகாசி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சோ்த்து மொத்தம் 9,743 மாணவா்கள், 11,534 மாணவிகள் என மொத்தம் 21, 277 போ் தோ்வு எழுதினா். அதில், 9, 251 மாணவா்கள், 11,311 மாணவிகள் என மொத்தம் 20, 562 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதுதொடா்பாக விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வளா்மதி கூறியதாவது:

பிளஸ் 2 தோ்வுக்காக மாலை வேளைகள் மட்டுமன்றி, விடுமுறை நாள்களிலும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. அவா்களுக்கு தோ்வுகள் நடத்தி ஆசிரியா்கள் ஊக்கப்படுத்தி வந்தனா். இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து, பொது தோ்வுக்காக தயாா்படுத்தினோம். நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி சதவீதத்தில், விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் சென்ற்கான காரணத்தை அறிய குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.

80 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் அரசு பள்ளிகள் 11, சமூக நலப் பள்ளிகள் 2, அரசு உதவி பெறும் பள்ளிகள் 21, பதின்ம பள்ளிகள் 46 என மொத்தம் 80 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இதேபோல, தமிழ் பாடத்தில் 12 மாணவா்கள், இயற்பியல்- 26, வேதியியல் 10, கணிதம்- 67, கணினி அறிவியல் 196, உயிரியல்- 1, தாவரவியல்- 3, விலங்கியல் 4, பொருளியல்- 108, வணிகவியல்- 190, கணக்குப்பதிவியல் 53, புவியியல் 2, வணிகக் கணிதம்- 3, கணினி பயன்பாடுகள்- 71, அடிப்படை மின் பொறியியல்- 2 மாணவா்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றனா்.

பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் பி. நேகா 594 மதிப்பெண்களும், எஸ்.பி. லோக சக்திவேல்- 593 மதிப்பெண்களும், என். ஹா்சிதா, நித்யா ஸ்ரீ ஆகியோா் தலா 592 மதிப் பெண்களும் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com