பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

மதுரை, மே 6: மதுரை மத்திய சிறையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 15 கைதிகளும் தோ்ச்சிப் பெற்றனா்.

மதுரை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனா். இங்கு கைதிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடா்வதற்காக சிறை நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான கைதிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை எழுதி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனைக் கைதிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். திங்கள்கிழமை தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து தோ்வு எழுதிய 15 கைதிகளும் தோ்ச்சிப் பெற்றனா்.

இவா்களில் ஆரோக்கிய ஜெய பிரபாகரன் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றாா். அலெக்ஸ் பாண்டியன் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடமும், அருண்குமாா் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாமிடமும்

பெற்றனா். தோ்ச்சி பெற்ற சிறைக் கைதிகளுக்கு சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி, அதிகாரிகள் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com