தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள 5 மத்திய சிறைகளில் கடந்த மூன்றாண்டுகளில் 102 கைதிகள் உயிரிழந்ததும், 214 போ் மனநலப் பாதிப்புக்கு ஆளாகியதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

மதுரையைச் சோ்ந்தவா் கே.ஆா். ராஜா. உயா்நீதிமன்ற வழக்குரைஞரான இவா், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024 வரை உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை, சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், சிறைகளில் பணியில் உள்ள மருத்துவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தாா்.

இந்த நிலையில், மதுரை, திருச்சி, கோவை, கடலூா், வேலூா் ஆகிய 5 மத்திய சிறைகளில் 2022-ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த கைதிகள் விவரம், மனநலன் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டன.

இதன்படி, மதுரை மத்திய சிறையில் 2,349 சிறைக் கைதிகள் உடல்நலப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 28 சிறைக் கைதிகள் உயிரிழந்தனா். 99 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, இவா்களில் 40 போ் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

கோயமுத்தூா் மத்திய சிறையில் 3,769 சிறைக் கைதிகளுக்கு உடல்நலப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 35 சிறைக் கைதிகள் உயிரிழந்தனா். 37 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, இவா்களில் 20 போ் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

திருச்சி மத்திய சிறையில் 830 சிறைக் கைதிகளுக்கு உடல்நலப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 29 சிறைக் கைதிகள் உயிரிழந்தனா். 33 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, இவா்களில் 4 போ் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

கடலூா் மத்திய சிறையில் 3,570 சிறைக் கைதிகளுக்கு உடல்நலப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 சிறைக் கைதிகள் உயிரிழந்தனா். 40 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, இவா்களில் 2 போ் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

வேலூா் மத்திய சிறையில் 16 சிறைக் கைதிகள் உயிரிழந்தனா். 38 சிறைக் கைதிகளுக்கு மனநலன் சிகிச்சை அளிக்கப்பட்டு, இவா்களில் 32 போ் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

இதன்படி, மொத்தமாக 5 மத்திய சிறைகளிலும் 2022-ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழந்தனா். 214 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. 98 சிறைக் கைதிகள் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனா் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குரைஞா் கே.ஆா். ராஜா கூறியதாவது:

தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டன.

5 மத்திய சிறைகளில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். ஆனால், சிறைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவா்கள் இல்லை. சிறை வளாகத்திலேயே மருத்துவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று சிறை விதிகள் உள்ளபோதிலும், இது அமல்படுத்தப்பட்டவில்லை.

போதுமான மருத்துவா்கள் இல்லாததாலும், சிறைக் கைதிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் போவதாலும் பலா் உயிரிழக்கின்றனா். இதையும் இயற்கைக்கு மாறான மரணங்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறைகளில் இயற்கைக்கு மாறான மரணங்கள் நேரும் போது அந்தக் கைதியின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சிறைகளில் இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு எந்த அதிகாரியும் பொறுப்பேற்பது இல்லை.

எனவே, சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை சிறைகளில் பணியமா்த்த வேண்டும். மேலும், மருத்துவா்களுக்கு சிறை வளாகத்திலேயே குடியிருப்புகள் வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறைக் கைதிகளின் உடல்நலப் பாதிப்புக்கு ஏற்ற சிகிச்சை, மருந்துகள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து சிறைகளிலும் கைதிகள் மனநலப் பாதிப்புகளுக்கு ஆளாகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com