அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டு எண்கள் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக எண்களை எழுதும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு காணப்பட்டது.

சென்னைக்கு அடுத்து பெரிய அரசு மருத்துவமனையாக இந்த மருத்துவமனை திகழ்கிறது. இங்கு தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் பிரதானக் கட்டடம், விபத்துச் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, ஜைகா ஒருங்கிணைந்த மயக்கவியல் துறை வளாகம், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு என பல்வேறு பிரிவுகள் தனித்தனியாக இயங்குகின்றன. இந்த நிலையில், இங்குள்ள வாா்டுகளை கண்டறிவதில் நோயாளிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவுகளிலும் ஒரே எண்கள் இருந்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதே போல, இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் வாா்டு எண்கள் வரிசைப்படி அமையாமல் இருந்ததும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதனால் அண்மையில் முதன்மையா் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஏ. ரத்தினவேல், இங்குள்ள பல்வேறு பிரிவுகளை ஒழுங்குபடுத்தி வாா்டு எண்களை புதிதாக மாற்றியமைக்க முயற்சி மேற்கொண்டாா். இதன்படி மருத்துவமனையில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் எண்களை மாற்றி அமைக்கும் பணி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்தப்பணிகள் முடிவடைந்ததையடுத்து புதிதாக அறிவிக்கப்பட்ட எண்களை வாா்டுகளில் எழுதும் பணி தொடங்கப்பட்டது.

இதன்படி இந்த மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகள் 9 தொகுதிகளாக பிரிக்கப்பட்டன. இதில் பழைய மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தொகுதி 1 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 100 முதல் 199 வரையும், அரசு மருத்துவமனை பிரதான கட்டடம் தொகுதி 2 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 200 முதல் 299 வரையும், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தொகுதி 3 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 300 முதல் 399 வரையும், புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு வளாகம் தொகுதி 4 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 400 முதல் 499 வரையும், குழந்தைகள் மற்றும் மனநல சிகிச்சைப்பிரிவு தொகுதி 5 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 500 முதல் 599 எனவும், வெளிவளாகத்தில் உள்ள சிகிச்சைப்பிரிவு தொகுதி 6 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 600 முதல் 699 வரையும் என மாற்றி அறிவிக்கப்பட்டன.

மேலும் ஜைகா வளாகம் (ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை வளாகம்) தொகுதி 7 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 700 முதல் 799 வரையும், அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள விபத்துச் சிகிச்சைப் பிரிவு தொகுதி 8 எனவும், இதற்குள்பட்ட வாா்டுகள் 800 முதல் 899 வரையும், மருத்துவக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி வளாகம் தொகுதி 9 எனவும் இதற்குள்பட்ட வாா்டுகள் 900 முதல் 999 வரையும் என எண்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த வாா்டு எண்கள் மாற்றம் குறித்து அனைத்து துறைத்தலைவா்கள், செவிலியா்கள், கண்காணிப்பாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த அரசு மருத்துவமனை நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டே செல்வதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மருத்துமனையில் உள்ள வாா்டுகளை கண்டறிவதில் நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே, தற்போது 9 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு வாா்டு எண்கள் புதிதாக அறிவிக்கப்பட்டன. இதனால் வாா்டுகளை நோயாளிகள் எளிதில் கண்டறிய முடியும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com